Monday, September 20, 2010

பன்றிக் காய்ச்சல் பீதி: பாதிப்பை தடுக்க அரசு தீவிரம்

சென்னை : பன்றிக் காய்ச்சல் தடுப்புப் பணிகளில் அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் பணிபுரியும் மூன்று ஆண் மருத்துவ பணியாளர்களுக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள், சென்னை அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் சிக்-குன்-குனியாவுக்கு அடுத்தபடியாக மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது பன்றிக் காய்ச்சல். தமிழகத்தில் மட்டும் 774 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தலைமைச் செயலக உதவி பி.ஆர்.ஓ., மோகனவேலு உள்ளிட்ட ஒன்பது பேர் பன்றிக் காய்ச்சலால் இறந்துள்ளனர்.தமிழக மக்கள் பீதிக்குள்ளான நிலையில், பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பூசி போடும்
திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. குறைந்த விலையில் தடுப்பூசி போடுவதாக அறிவித்த அரசு, மக்களின் கோரிக்கையை ஏற்று இலவசமாக போட முடிவு செய்தது. தடுப்பூசி போடும் முகாம்கள் நேற்று செயல்படத் துவங்கியுள்ளன. மருத்துவமனையில் பணியாற்றும் 39 ஆயிரம் ஊழியர்களுக்கும் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையைச் சேர்ந்த மூன்று மருத்துவ ஊழியர்கள் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஐந்து ஆண் மருத்துவ ஊழியர்கள், ஒரு வாரத்திற்கு முன் கடும் காய்ச்சலால்
 சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இவர்களின் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை நடத்தியதில், முனிரத்னம், சுனில் சல்கீத் ராஜா, ஜான் கனோலி மூவருக்கும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூவருக்கும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் தனிப் பிரிவில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

குழந்தை பெற்ற பெண்ணும் பாதிப்பு: சென்னை திரு.வி.க., நகர் டி.டி., தோட்டத்தைச் சேர்ந்தவர் இக்பால்(30); தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பர்வத் பேகம்(26). கடந்த இரு நாட்களுக்கு முன், இவருக்கு எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.அதன் பின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால், டாக்டர்கள் சோதித்தனர். பர்வத் பேகத்திற்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது. அவரை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதவிர, சென்னை அரசு பொது மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் கிடைத்தால் தான், பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என தெரிய வரும்.


கோவையில் 7 பேருக்கு தீவிர சிகிச்சை: பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் நேற்று கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கடந்த வாரம் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அன்னூர் பஞ்சு வியாபாரி பொன்னுச்சாமி, சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது மகன் ரவிச்சந்திரன்(18) பன்றிக் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவையின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேர் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

புதுச்சேரியில் நால்வருக்கு பாதிப்பு: புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி உள்ளிட்ட நான்கு பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியை சேர்ந்த சிறுமி ஜோதிகா, செல்வி உள்ளிட்ட நான்கு பேர் புதுச்சேரியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில், பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SOURCE:http://www.dinamalar.com/News_Detail.asp?Id=88321

No comments:

Post a Comment