கோவை : புரோக்கர் மூலம் வேலைக்கு கேரளா அழைத்துச் செல்லப்பட்ட மூன்று வாலிபர்களிடம் சிறுநீரகம் திருடப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், தென்காசி அருகேயுள்ள தேசியம்பட்டியைச் சேர்ந்த கடல் என்பவரின் மகன் சுடலை(18). ஐந்தாம் வகுப்பு வரை படித்து விட்டு கிடைக்கும் வேலை செய்து கொண்டிருந்தார்.
மூன்று மாதங்களுக்கு முன் ஆலங்குளத்தைச் சேர்ந்த புரோக்கர் ராஜா என்பவர் இவரது வீட்டுக்கு வந்து கோழிக்கோட்டில் வேலை இருப்பதாகக் கூறி அழைத்தார்.பெற்றோர் சம்மதம் தெரிவித்ததால், சுடலையும், அவரது நண்பர்கள் இருவர் என மூவரும் கேரளா சென்றனர். கோழிக்கோட்டில், சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த இவர்களை இரவு, பகல் பாராமல் வேலை வாங்கினர். அதிருப்தி அடைந்த வாலிபர்கள் அங்கிருந்து வெளியேற முடிவு செய்தனர்.கேரளாவில் இருந்து லாரியில் தப்பி வந்த சுடலை, கோவை ரயில்வே ஸ்டேஷன் முன் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், தென்காசிக்கு செல்ல வழி கேட்டுள்ளார். ஆட்டோ டிரைவர்களும் சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் சென்றால், தென்காசிக்கு பஸ் கிடைக்கும் என தெரிவித்தனர். அப்போது, திடீரென மயங்கி சரிந்த சிறுவனுக்கு டீ வாங்கிக் கொடுத்த ஆட்டோ டிரைவர்கள், யார் என விசாரித்தனர்.கேரளாவில் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தெரிவித்த சுடலையை, ஆட்டோ டிரைவர்கள் அழைத்துக் கொண்டு, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் மனு கொடுத்தனர்.
சம்பவம் பற்றி வாலிபர் சுடலை கூறியதாவது:படிப்பு இல்லாததால், கிடைக்கும் வேலையை செய்து வந்தேன். ஆலங்குளத்தைச் சேர்ந்த புரோக்கர் ராஜா தான் எங்களுக்கு வேலை இருப்பதாகக்கூறி கோழிக் கோட்டுக்கு அழைத்துச் சென்று, சிப்ஸ் கம்பெனியில் சேர்த்தார். இரவு, பகல் என ஓய்வு தராமல் வேலை வாங்கப்பட்டதால் அங்கிருந்து தப்பிக்க முடிவு செய்தோம்.அங்கிருந்த சிலர் மயங்க மருந்தை எங்கள் முகத்தில் ஸ்பிரே செய்தனர். மயங்கி சரிந்தோம். கண் விழித்தபோது, அடிவயிற்றில் ஏற்பட்ட வலியுடன் தண்டவாளத்தில் கிடந்தோம்.அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எங்களை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் கிட்னி அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த நாங்கள் காயம் ஆறியதும் அங்கிருந்து தப்பிக்க நினைத்தோம்.எனக்கு காயம் ஆறிவிட்டதையடுத்து, மருத்துவமனையில் இருந்து தப்பி, கோவை செல்லும் லாரியில் ஏறி தப்பித்தேன். மற்ற இருவரும் மருத்துவமனையில் உள்ளனர்,' என்றார்.வேலைக்காக கேரளா அழைத்துச் செல்லப்பட்ட தமிழக வாலிபர்கள் மூவரின் சிறுநீரகத் திருட்டு பற்றி கோவை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment