Tuesday, September 28, 2010

டுவென்டி-20 "கிங்ஸ்' தோனி: அஷ்வின், முரளி விஜய் அசத்தல்


ஜோகனஸ்பர்க்:  "டுவென்டி-20' உலக கோப்பை, ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடர் என மூன்று கோப்பைகளை வென்று அசத்தியுள்ளார் தோனி. இதன் மூலம் "டுவென்டி-20' போட்டிகளின் "கிங்ஸ்' என்பதை, தோனி நிரூபித்துள்ளார். தவிர, சென்னை அணியின் அஷ்வின் தொடர் நாயகன், "கோல்டன் விக்கெட்' விருதையும், முரளி விஜய் "கோல்டன் பேட்' விருதையும் கைப்பற்றி அசத்தினர்.
இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் தென் ஆப்ரிக்காவில் நடந்தது. இதில் சென்னை, மும்பை, பெங்களூரு, வாரியர்ஸ் உட்பட 10 அணிகள் பங்கேற்றன. இதன் பைனலில் சென்னை, வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய வாரியர்ஸ் அணி, அஷ்வின் மற்றும் முரளிதரன் பவுலிங்கில் நிலை குலைந்தது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டும் எடுத்தது.
எளிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு முரளி விஜய் (58), மைக் ஹசியின் (51*) அபார ஆட்டம் கைகொடுக்க, 19 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. இதன் மூலம் முதன் முதலாக சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்ற ஐ.பி.எல்., அணி என்ற பெருமையை தட்டிச் சென்றது.
"டுவென்டி-20' கிங்ஸ்:
இந்திய அணிக்கு கடந்த 2007ல் உலக கோப்பை ("டுவென்டி-20') பெற்றுத் தந்த தோனி, இந்த ஆண்டு சென்னை அணிக்கு ஐ.பி.எல்., கோப்பையை வென்று தந்தார். இம்முறை சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் கோப்பை வென்று காட்டியுள்ளார். இதன் மூலம் "டுவென்டி-20' போட்டிகளில் தன்னை "கிங்ஸ்' என நிரூபித்துள்ளார்.
ஒட்டுமொத்த அசத்தல்:
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள், பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இத்தொடர் முழுவதும் அபாரமாக செயல்பட்டது தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். முரளி விஜய் (3 அரைசதம்), ரெய்னா, மைக் ஹசி (தலா 3 அரை சதம்) மற்றும் கேப்டன் தோனியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட அஷ்வின் தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். தவிர, முரளிதரன், போலிஞ்சர் ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு விக்கெட்டுகளை சாய்த்தனர். பாலாஜி, ஜகாதியும் தன்பங்கிற்கு அசத்தி, அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர். 

உள்ளூரில் சொதப்பல்:
தென் ஆப்ரிக்க சாம்பியன் அணியான வாரியர்சின் கோப்பை கனவு, சென்னையால் தகர்ந்தது. இதற்கு பேட்டிங்கில் கேப்டன் ஜேக்கப்பை மட்டும் பெரிதும் நம்பியிருந்தது தான் முக்கிய காரணம். பவுச்சர், இங்ராம், பிரின்ஸ் ஆகியோர் முக்கிய நேரங்களில் ஏமாற்றினர். பவுலிங்கில் தியரான், போத்தா, நிடினி, போயே ஆகியோர் ஆறுதல் தந்தனர்.

சச்சின் ஏமாற்றம்:
இத்தொடரில் பங்கேற்ற மற்ற ஐ.பி.எல்., அணிகளான மும்பை, பெங்களூரு அணிகள் நான்கு போட்டிகளில், இரண்டில் மட்டும் வென்றது. பேட்டிங்கில் சச்சின் (148 ரன்கள்), போலார்டு (127), சிகர் தவான் (114) சிறப்பாக செயல்பட்ட போதிலும், பவுலிங்கில் ஜாகிர் கான், ஹர்பஜன் ஆகியோர் சொதப்பினர். மலிங்கா மட்டும் ஆறுதல் தந்தார். இருப்பினும் மும்பை அணி மோசமான "ரன்ரேட்டில்' வெளியேறியது சோகம் தான்.
பெங்களூரு அணிக்கு டிராவிட் (141), கோஹ்லி (113), பாண்டே (100) ஆகியோர் பேட்டிங்கில் ஓரளவு கைகொடுத்தனர். வினய் குமார் அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தினார். உத்தப்பா, ரோஸ் டெய்லர் "பார்மில்' இல்லாதது, "ஆல் ரவுண்டர்' காலிஸ் விலகல், ஸ்டைன் காயம் போன்றவையும் சேர்ந்து கொள்ள, பெங்களூரு ஏமாற்றத்துடன் வெளியேறியது.
ஆஸி., வெளியேற்றம்:
ஆஸ்திரேலிய அணிகளான தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா அணிகள் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தெற்கு ஆஸ்திரேலிய அணி அரையிறுதியிலும், விக்டோரியா முதல் சுற்றுடன் நடையை கட்டியது. இந்த அணிகளின் டெய்ட், டேவிட் ஹசி, கிளிங்கர் சிறப்பாக செயல்பட்டனர். தென் ஆப்ரிக்காவின் லயன்ஸ், இலங்கையின் வயம்பா முதல் சுற்றுடன் திரும்பியது. நியூசிலாந்தின் சென்ட்ரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணி, பங்கேற்ற நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்தது.

முரளி விஜய் "டாப்'
இத்தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர் வரிசையில் சென்னை அணியின் முரளிவிஜய், 294 ரன்கள் குவித்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக இவருக்கு "கோல்டன் பேட்' வழங்கப்பட்டது. இவருக்கு அடுத்த இடத்தில் வாரியர்ஸ் அணியின் டேவி ஜேக்கப் (286) உள்ளார். இத்தொடரில் அதிக ரன்கள் குவித்த "டாப்-5' வீரர்கள்:
வீரர்/அணி    போட்டி    ரன்கள்
1.முரளிவிஜய் (சென்னை)    6    296
2.ஜேக்கப் (வாரியர்ஸ்)    6    286
3.கிளிங்கர் (தெற்கு ஆஸி.,)    5    226
4.ரெய்னா (சென்னை)    6    203
5.பெர்குசன் (தெற்கு ஆஸி.,)    5    200

"முதல்வன்' அஷ்வின்
கடந்த ஐ.பி.எல்., தொடரில் அசத்திய சென்னை வீரர் அஷ்வின், சாம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக விக்கெட் (13) வீழ்த்தி, "கோல்டன் விக்கெட்' விருதை தட்டிச் சென்றார். இவருக்கு அடுத்த இடத்தில் மற்றொரு சென்னை வீரர் முரளிதரன் (12) உள்ளார். இத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய "டாப்-5' வீரர்கள்:
வீரர்/அணி    போட்டி    விக்கெட்
1.அஷ்வின் (சென்னை)    6    13
2.முரளிதரன் (சென்னை)    6    12
3.கிறிஸ்டியன் (தெற்கு ஆஸி.,)    5    9
4.போலிஞ்சர் (சென்னை)    6    9
5.டெய்ட் (தெற்கு ஆஸி.,)    4    8

"சிக்சர்' போலார்டு
இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் மும்பை அணியின் போலார்டு (14 சிக்சர்) முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் சென்னையின் ரெய்னா (12 சிக்சர்) உள்ளார். மூன்றாவது இடத்திலுள்ள மற்றொரு சென்னை வீரர் முரளி விஜய், தெற்கு ஆஸ்திரேலியாவின் கிளிங்கர், ஆகியோர் தலா 10 சிக்சர்கள் அடித்துள்ளனர். தவிர, ஒரே போட்டியில் அதிக சிக்சர் (9) அடித்த வீரர் என்ற வரிசையிலும், போலார்டு முதலிடத்தில் உள்ளார்.

ரெய்னா அபாரம்
ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை ரெய்னா (சென்னை) தட்டிச் சென்றார். இவர் பெங்களூருவுக்கு எதிரான அரையிறுதியில் 94 ரன்கள் குவித்த அவுட்டாகாமல் இருந்தார். இரண்டாவது இடத்தில் விக்டோரியாவின் பின்ச் (93*) உள்ளார். 

சென்னை அபாரம்
சென்னை அணி இதுவரை மூன்று ஐ.பி.எல்., ஒரு சாம்பியன்ஸ் லீக் தொடர் என மொத்தம் 53 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் 31 போட்டிகளில் வெற்றியும், 21 ல் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. 

தோனி பாராட்டு
வெற்றி குறித்து சென்னை அணி கேப்டன் தோனி கூறுகையில்,"" வாரியர்ஸ் அணி பைனலுக்கு ஏற்ப, சிறப்பாகத்தான் துவங்கியது. ஆனால் எங்கள் சுழற் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆறாவது ஓவரில் ஜேக்கப்பின் விக்கெட்டை வீழ்த்திய அஷ்வின், சென்னை அணிக்கு திருப்புமுனை தந்தார். இவர் போராட்ட குணம் நிறைந்தவர். எப்போது பவுலிங் செய்ய அழைத்தாலும் தயாராக இருப்பார். தவிர, பலவிதமான வகையில் பந்து வீசி, விக்கெட்டுகளை கைப்பற்றுவார். பாலாஜியின் செயல்பாட்டையும் மறக்க முடியாது. இவரும் தன்பங்கிற்கு நெருக்கடி கொடுத்தார். இதனால் எங்கள் வெற்றி எளிதானது,'' என்றார்.

No comments:

Post a Comment