லண்டன்: இது வரை நடந்த எல்லா போட்டிகளிலும் பிக்சிங் ( சூதாட்டம் ) அடிப்படையில் தான் நடந்துள்ளது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் உள்ள யாசர் அமீது தனது பேட்டியில் சக வீரர்கள் வண்டவாளத்தை , தண்டவாளத்தில் ஏற்றி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். இவரது ஆதாரப்பூர்வமான வீடியோ பேட்டி பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டம் நடத்தியது உண்மை தான் என்பது புலனாகிறது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட் போட்டியில் பாக்., வீரர்கள் இன்னிங் தோல்வி அடைந்தனர். இந்த போட்டி நடந்து கொண்டிருக்கும் போது லண்டனில் இருந்து வெளியாகும் நியூஸ் ஆப் வேர்ல்டு என்ற நாளிதழ் தனது சிறப்பு பக்கத்தில் பாகிஸ்தான் வீரர்களின் சூதாட்டம் குறித்து முதன்முதலாக வெளியிட்டது. இதில் ஒன்றரை கோடி வரை பேரம் பேசப்பட்டது.
நோபால் வீசி தங்களின் தோல்வியை எவ்வாறு நிர்ணயிப்பது என வாங்கும் காசுக்கு நன்றியோடு ( நாட்டு துரோகம் ) செயல்பட்டனர். பாக்., அணி கேப்டனர் சல்மான் பட் பணம் வாங்கும்போது அந்த காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதனையடுத்து ஸ்காட்லாந்து யார்டு போலீசார் , கேப்டன் சல்மான்பட், வேகப்பந்து வீச்சாளர்கள் முகம்மது ஆசீப், முகம்மது அமீர், விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல், ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். தரகர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இந்த சூதாட்டம் கிரிக்கெட் உலகில் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது. கேப்டன் சல்மான் பட், ஆசீப், ஆமீர், ஆகிய 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பணம் சம்பாதித்து என்ன பயன் ? : இந்நிலையில் நியூஸ் ஆப் வேர்ல்டு இன்று அணியின் துவக்க ஆட்டக்காரர் யாசர் அமீது அளித்த பேட்டியை வெளியிட்டுள்ளது. இந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
நான் அணியின் வெற்றிக்காக போராடி விளையாடினேன் ஆனால் சில வீரர்கள் மேட்ச் பிக்சிங் செய்து தோல்விக்காக விளையாடினர். எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கும். நோ பால் வீச 24 ஆயிரம் வரை பெற்றனர். சூதாட்ட தில்லு முல்லு காரணமாக இப்படி பணம் சம்பாதித்து என்ன பயன் ? இவர்கள் எப்படியும் சிக்குவார்கள் என எனக்கு தெரியும். இங்கிலாந்து போட்டியில் ஒரு மில்லியன் பவுண்ட் வரை பேரம் பேசப்பட்டது. அனைத்து மேட்சுகளிலும் சூதாட்டம் நடக்கும். ஒவ்வொரு மேட்சும் பிக்சிங் அடிப்படையில் விளையாடி தோல்வியை சந்திப்பர் . அவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் . இவ்வாறு யாசர் கூறியுள்ளார்.
பாக்., கிரிக்., வாரியம் அவசரமாக கூடுகிறது : இவரது பேட்டி மூலம் பாக்., வீரர்கள் சூதாட்டம் உறுதியாகியுள்ளது. இதன் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தான் அரசும் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது தற்போதைய கேள்வி. யாசர் பேட்டிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவசரமாக கூடியிருக்கிறது.
இலங்கை வீரர்கள் பிக்சிங்கில் சிக்குகின்றனர் : இந்நிலையில் இலங்கை அணி வீரர்களும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டிருப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக சில வீரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
nandri: dinamalar
No comments:
Post a Comment