Saturday, July 24, 2010

பட்டதாரிகளிடம் நிறுவனங்கள் எதிர்பார்ப்பது என்னென்ன ?

நிறுவனங்கள் பட்டதாரிகளைப்பணிக்குத் தேர்ந்தெடுப்பதில் தற்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. முன்பெல்லாம் நிறுவனங்கள் தங்கள் தேவைக்குத் தகுந்த திறன் படைத்தபுத்திசாலியான இளைஞர்களைப் பணியிலெடுக்க ஆர்வம் செலுத்தின.ஆனால் தற்போது புத்திசாலித்தனத்துடன் உணர்வு மட்டத்திலும் தயார் நிலையில் உள்ள இளம் பட்டதாரிகளைத் தேர்ந்தெடுப்பதில்நிறுவனங்கள் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளன. நிறுவனங்களின் இடையே இது குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன.பட்டதாரிகளிடம் இன்றைய நிறுவனங்கள் எதிர்பார்க்கும் முதல்

முக்கிய ஐந்து அம்சங்களை இங்கே பார்க்கலாம் :

1. தகவல் பரிமாற்றத் திறன் : தகவல் பரிமாற்றம் என்றாலே நன்றாகப் பேசுவது மட்டும்தான் என்ற தவறான கருத்து நம்மிடையே உள்ளது. ஆனால் நல்ல தகவல் பரிமாற்றம் என்பதில் நாம் நினைப்பதைப் பேசுவதோடு, நம் எதிரில் இருப்பவர் சொல்வது மற்றும் எதிர் பார்ப்புக்கேற்ப பேசுவதும் அடங்கும். இதனால்தான் மிகச் சிறந்த சில பேச்சாளர்கள் கூட, அரங்கிலிருப்பவரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாவிட்டால் தகவல் பரிமாற்றத் திறன் குறைந்தவர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். எனவே பேசுவது, கவனித்து அதன் பின் அதற்கேற்ப பேசுவது என்ற இரு அம்சங்களும் தேவைப்படுகிறது.

2. ஈடுபாடு : ஒரு நிறுவனத்தில் பணி புரியும் இளம்தலைமுறையினர் அந்த நிறுவனத்தில் மிகுந்த ஈடுபாட்டோடு பணிபுரியும் போது அவர்களை அறியாமலேயேஅவர்கள் நண்பர்களிடமும், மற்றவர்களிடமும் நிறுவனத்தைப் பற்றிய நல்ல தகவல்களை வெளியிடுகிறார்கள். இது நிறுவனத்திற்குப் பெரிதும் உதவிகரமாக உள்ளதாக நிறுவனங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பணியில் சேர்பவரின் தனி நபர் ஈடுபாடு அவரின் முழுத் திறமையையும் வெளிப்படுத்தும் முக்கிய கருவியாகவும் உள்ளது. எனவேதான் தற்போதைய நிறுவனங்கள் இந்த அம்சத்தில் கவனம் செலுத்துகின்றன.

3. தர்க்கரீதியான சிந்தனை : இன்றைய பாடப் பகுதிகள் ஓரளவுக்கு இந்தத் திறனை வளர்க்கும் விதத்தில் உள்ளது. ஒரு பிரச்னைக்குத் தீர்வு கண்டுபிடிக்கும் போதே அது மேலும் சில பிரச்னைகளை உருவாகுவதை நாம் அறிவோம். பணி புரியும் இடத்தில் பல்வேறு வயதுடைய மனிதர்களுடன் பணியாற்றுவது, அன்றாடம் பல்வேறு சூழல்களைச் சந்திப்பது போன்ற தேவைகள் இருப்பதால் தர்க்கரீதியான சிந்தனை உடையவர்களை நிறுவனங்கள் நாடுகின்றன.

4. சக மனிதர்களிடம் பழகும் தன்மை : ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்தத் திறன் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்டர்பெர்சனல் ஸ்கில்ஸ் எனப்படும் திறன் உள்ளவர்கள் தான் இலக்குகளை எளிதில் அடைவதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக சேல்ஸ், மார்க்கெட்டிங், கன்சல்டிங், மேனேஜ்மென்ட் போன்ற துறைகளில் இந்தத் திறன் படைத்தவர்களே பெரும் வெற்றியாளர்களாகத் திகழ்கிறார்கள். ஆனால் ஐ.டி., தொடர்புடைய துறைகளில் பணியாற்றும் பலருக்கும் இந்தத் திறனின் குறைபாடு காரணமாக எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடிவதில்லை. எனவே இந்தத் திறனையும் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

5. புதியதைக் கற்கும் திறன் : பட்டப் படிப்பைப் படிக்கும் காலத்திலேயே இந்தத் திறனை வளர்த்துக் கொள்வதே அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால் இந்தத் திறமையை குறுகிய காலத்தில் பழக்கத்திற்குக் கொண்டு வருவது சிரமமான காரியமாகும். படிப்பை முடித்துவிட்டுப் புதிய நிறுவனமொன்றில் இணையும் இளைஞர்கள் இந்தத் திறனுடையவர்களாயிருந்தால் மட்டுமே நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்ற முடியும் என்பதால் இதுவும் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.

3 comments: